மஞ்சுல வெடிவர்தன – 90களில் நம்மோடு தென்னிலங்கையில் ஒன்றாக செயற்பட்ட இடதுசாரி செயற்பாட்டாளர். பல தடவைகள் சிறந்த நாவல், சிறந்த கவிதை, சிறந்த நாடகாசிரியர் போன்றவற்றுக்கான விருதுகளைப் பெற்றவர். மாற்றுப் பத்திரிகையாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். ”மரியா எனப்பட்ட மேரி” எனப்படும் இவரது சிறுகதை நூல் இலங்கையில் பெருத்த சர்ச்சைகளை கிளப்பிய கதை. அது இலங்கையில் தடைசெய்யப்பட்டது. தமிழ் மக்களுக்கெதிரான அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக நிறைய எழுதியவர், இயங்கியவர். ”அங்குலிமாலா”, ”நிமலராஜனின் அம்மாவுக்கு” போன்ற கவிதைகள் தமிழில் ஏற்கெனவே மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசித்திபெற்றவை. புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்கிற வீண்பழி சுமத்தப்பட்டு தேடப்பட்ட நிலையில் இலங்கையிலிருந்து தப்பி வந்து ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சொந்த மண்ணை இழந்த சிங்களவர்களின் பட்டியலில் இணைந்தபடி அவர் எழுதிய கவிதையொன்று இது. –
கவிதை மொழிபெயர்ப்பு – என்.சரவணன்
ஆம் உண்மை! நான் ஒரு சிங்களவன்
ஆம் சிங்களவன்
நான் ஒரு சிங்களவன்
தூய சிங்களவன்
சிங்களத்தில் காண
வேண்டிய கனவினை
தமிழில் காண விளைந்ததில்
தாய் நாட்டின் கதவுகள்
மூடப்பட்டன
நான் சிந்திப்பதும் சிங்களத்தி்ல்.
எம் மண்ணில்
துடைத்தெறியப்பட்டுக்கொண்டிருக்கும்
இறுதித் தமிழர் வரை
கவி வரைவேன் சிங்களத்தில்
சிங்களவனானதாலேயே
கவி எழுதும் என் கைகளிலும்
இரத்தக் கரைகள்
எழுதுகோலின் மையில் கூட – இரத்தம்
சிங்களத்தில் புன்னகைக்கத்தான் விருப்பம்
அதற்காகவே அதுவும் இயலவில்லை
சைவர் கடையில் சாப்பிடுகையில்
மனதளவில் முல்லைத்தீவைக் கைப்பற்றும்
நண்பனொருவன்
மின்னஞ்சலில்
உழுந்து வடையொன்றை அனுப்பி வைத்தான்
என் வாழ்வை வேரிடத்தில்
கழித்தாலும் பரவாயில்லை தோழனே!
தாய்நாட்டிலேயே
நாடு கடத்தப்பட்டவனாக
இருப்பதிலும்
இன்னொரு நவ கவி
அசை போடுகிறது
அதுவும் தமிழரைப் பற்றியது தான்
அது ”புதிய தமிழன்”
சிங்களத்தை நோக்கி சிரிக்கும் தமிழன்
நான் அவனுக்கு
சிங்களத்தில்
வாழ்த்து கூறுகிறேன்.
rommba alahaana….very nice